Wednesday, 13 February 2019

பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை திட்டம் விவசாயிகளை கௌரவபடுத்துவதற்கானது...விவசாயிகளை அலைய வைப்பதற்கல்ல

மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை திட்டமானது (PM Kisan Samman Nidhi) விவசாயிகள் பயன்பெறுவதற்காக  அரசால் இயன்ற ஒரு சிறிய திட்டமாகும். சொல்லப்போனால் விவசாயிகளை ஓரளவு கௌரவப் படுத்துவதுதான் இதன் நோக்கமாகும். ஆனால் அதற்கு முட்டுகட்டை போடும் வகையில் தற்போது சில கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் சர்வாதிகார செயல்பாடுகளால் பயனடைய வேண்டிய விவசாயிகளிடம் தேவையில்லாத கெடுபடி விதித்து அவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் கெடுபிடிகள்

விவசாயிகளிடம் ஆதார் அட்டை நகலுடன், வாக்களர் அடையாள அட்டையையும் கேட்கின்றனர். வாக்காளர் அட்டை இல்லை என்றால் எடுத்துவரச்சொல்லி அலைய வைக்கின்றனர். கூட்டுபட்டா உள்ளவரிடம் பத்திரத்தின் நகல்களை கேட்கின்றனர். மைனராக இருக்கும்போது ஒருவருக்கு கிடைத்த விவசாய நிலம் தற்போது மேஜர் ஆன பிறகும் அவர்களுக்கு இத்திட்டதின் கீழ் பயன் கிடைக்காது என்கின்றனர். பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர் இறந்துவிட்டால் அந்த சொத்தை அனுபவித்து வரும் அவருடைய வாரிசுதாரருக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் கிடைக்காது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் பல வகையான காரணங்களைக் கூறி கௌரவ நிதியின் பயன்களை மறுத்து வருகின்றனர்.

உண்மை என்ன?

தற்போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள சான்றே போதுமானதாகும்.
கூட்டுபட்டா உள்ளவர்கள் அப்பட்டாவில் ஐந்து ஏக்கர் நிலத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் பத்திரத்தின் நகல் மற்றும் வில்லங்க சான்றின் நகல்களை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. [ஒரே சொத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்டவர் உரிமை கோரினால் மட்டுமே இத்தகைய ஆவணத்தை கேட்க வேண்டும்]
இத்திட்டத்தின் கீழ் கனவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகள் மட்டுமே ஒரே குடும்பமாக கருதப்படும். இந்நிலையில் 1.12.2018 முதல் மேஜரான மகன் அல்லது மகளுக்கு 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் இருந்தால் அவர்கள் சிறு விவசாயியாக கருதப்படுவர். அவர்களின் பெயர் ஒரே குடும்ப அட்டையில் இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் சொத்துக்கள் தனியாகவே கருதப்படும்.
பட்டா யார் பெயரில் உள்ளதோ அவர்கள் இறந்திருந்தால் அவர்களின் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையளாம். அதற்கு சான்றாக இறப்பு சான்றிதழ் கொடுத்தால் போதுமானதாகும். வாரிசு சான்றிதழ் இருந்தாலும் நல்லது இல்லையென்றால் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் நேரடி விசாரணை மேற்கொண்டு அல்லது இதர ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளலாம். 

ஆக பாமர விவசாயிகளை அலைய வைக்காமல் அவர்களை கௌரவிப்பதுதான் இத்திட்டதின் நோக்கமாகும்.  இந்நிலையில் விவசாயிகளை தேவையில்லாத ஆவணங்களின் நகல்களை கொடுக்குமாறு சொல்லி  அவர்களை  அலைய  வைப்பது  அவர்களை  அவமானப்படுத்துவது  ஆகும்  என்பதை  கிராம நிர்வாக அலுவலர்கள்  உணர வேண்டும். விவசாயிகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும். அனைத்து சிறு குறு விவசாயிகளும் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை பெற வேண்டும். அதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

#கிராம நிர்வாக அலுவலர்
#பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை


ஆசிரியர் குறிப்பு: சி.பிரபு, வழக்கறிஞர். 

2 comments:

Please do not enter any spam link in the comment box