Search This Blog

Tuesday, 31 March 2020

கிராம கணக்கு எண்-2 எனப்படும் அடங்கல்

அடங்கல்
வருவாய்துறையால் பராமரிக்கப்படும் அடங்கல் புத்தகம் 

அடங்கல் என்பது குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் உள்ள பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களின் பயன்பாடு குறித்த விவரங்கள் அடங்கிய வருவாய் பதிவேடு ஆகும். இப்பதிவேடு கிராம கணக்கு எண்-2 என்று குறிப்பிட்டு வருவாய்துறையால் பராமரிக்கப்படுகிறது.  இதனை அந்தந்த வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவர்கள் நேரடி கல  ஆய்வு மேற்கொண்டு தாயாரிப்பர்.

அரசு புறம்போக்கு நிலங்கள் 

அடங்கல் என்கிற இந்த பதிவேட்டில் நிலங்களை நீர்ப்பாசன ஆதாரங்கள் வாரியாகவும், நில  பாகுபாடு மற்றும் புல  வாரியாகவும் பிரித்து அவைகளின் பயன்பாடுகள் குறிப்பிடப்படுகிறது. எந்த தனிநபருக்கும் உரிமையில்லாத அரசு புறம்போக்கு நிலங்களின் பயன்பாடும் அவற்றில் உள்ள விவரங்களும் அடங்கல் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். புறம்போக்கு புல எண்களில் பயிரிடப்பட்டவை, கரம்பாக உள்ளவை, மரங்கள் உள்ளவை, கட்டிடங்கள்,  மற்றும் புறம்போக்கில்  எவரோனும் ஆக்கிரமித்து கட்டிடங்கள்  அல்லது வேறு ஏதேனும் வகையில் பயன்படுத்தும் தருணங்களிலும் அத்தகைய தகவல்கள் அடங்கல் பதிவேட்டில் பதிவுசெய்யப்படும்.  இதில் அரசு பாசன ஆதார விவரங்களான ஏரி, குளம், குட்டை, ஆயக்கட்டு கிணறு விவரம் ஆகியவையும் குறிப்பிடப்படும்.

அடங்கல் பதிவேட்டில் குறிப்பிடப்படும் முக்கிய விவரங்கள்

பசலி ஆண்டு, நில  அளவை எண் (புல எண்) , உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை மற்றும் நிலத்தின் கைப்பற்றுதாரருடைய பெயர் அல்லது அனுபோகதாரருடைய அதாவது பட்டாதாரருடைய பெயரும் குறிப்பிடப்படும். மேலும் அப்புல எண்  நன்செயா, புன்செயா  என்று வகைப்படுத்தி சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பயிரின் பெயர், அவற்றின் பரப்பு, நீர் ஆதாரம் மற்றும் எந்த மாதத்தில் சாகுபடி மற்றும் அருவடை செய்யப்பட்டது, விளைச்சல் விழுக்காடு, முதல் போகம், இரண்டாம்  போகம் போன்ற விவரங்களும் இருக்கும்.  சில  நிலங்களின்  பட்டா ஒருவர் பெயரில் இருக்கும்.  ஆனால் அந்நிலத்தில் பல  ஆண்டுகாலமாக சாகுபடி செய்பவர்  வேரொருவராக இருப்பார்.  எனவே, நிலத்தை  யார் சாகுபடி செய்கிறார்கள் என்பதை முறையாக ஒவ்வொரு போகத்திலும் அடங்கல் புத்தகத்தில் கிராம நிர்வாக அலுவலர்  அவர்கள் பதிவுசெய்கிறார் என்பதை உறுதிபடுத்துவது அவசியமாகும்.  அதனை உறுதி செய்ய   ஏதுவாக அடங்கல் பதிவேட்டின் "கலம் 7"-ல்  சாகுபடியாளரின் பெயர் குறிப்பிடப்படும். 
  
இத்தகைய விவரங்கள் ஒவ்வொரு போகமும்,  பசலி ஆண்டுதோரும் சேகரிக்கப்பட்டு அடங்கள் கணக்கில் பதியப்படும். இவ்விவரங்களை சேகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் அதனை மேலாய்வு செய்து உறுதிபடுத்தும் பொறுப்பு அந்தந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியருக்கும் உள்ளது.

அடங்கல் கணக்கு ஏன்  அவசியம்?

ஒவ்வொரு விவசாயியும் தான் பயிரிட்டுள்ள விவரம் கிராம அடங்கல் புத்தகத்தில்   முறைப்படி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பதிவுசெய்துள்ளாரா என்பதை உறுதிசெய்வது நல்லது.  ஏனென்றால்  இந்த ஆவணம் நீங்கள் உங்கள் நிலத்தில் பயிரிட்டதற்கான ஆதாரமாகும். இது  தங்களுக்கு வங்கிகளில் கடன் பெறவும், அரசிடமிருந்து நிவாரன நிதி பெறவும்,  விவசாய சலுகைகள் மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்கும் பயன்படும். அதுமட்டுமல்லாமல், எதிர் காலத்தில் தங்களின் விவசாய  நிலத்தின் அனுபவம் குறித்து ஏதேனும் பிரச்சனைவரும் பட்சத்தில் அடங்கல் ஆவணம் உங்களைக் காப்பாற்றும்.

குறிப்பு: 01.07.2019 முதல் தனது நிலத்தில் பயரிடப்பட்ட விவரங்களை விவசாயிகளே இணையத்தில் பதிவுசெய்யலாம். அதன்பின் கிராம நிர்வாக அலுவலர் நிலத்தினை ஆய்வு செய்து பதிவுசெய்த விவரம் சரி  என்று குறிப்பிட்டவுடன் e-Adangal-ஐ இ-அடங்கல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று வருவாய் துறையிடமிருந்து அறிவிப்பு வந்தது. ஆனால்  பெரும்பாலான மாவட்டங்களில் இத்தகைய சேவை நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

#அடங்கல் #பட்டா #பதிவேடு #e-Adangal #Adangal #இ-அடங்கல்


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...