Saturday, 5 June 2021

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்னவா?


உலக சுற்றுச்சூழல் தினமான (
5 ஜூன்) இன்றாவது நாம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்படைந்து இயற்கை அளித்த காடு, மலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பாதுகாத்து அதனை நம்பி வாழும் பல்லுயிர்களை அரவனைத்து சுற்றுச்சூழலோடு இணைந்து வாழ்வதை கற்றுக்கொள்ள  வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இனியும் நாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் கண்மூடித்தனமாக செயல்படுவதை தொடர்ந்து கொண்டே இருந்தால் கொரோனா போன்ற கொடிய நோய்க்கு நம்மில் பலர் பலியாகக் கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? அதில் உள்ள உயிரினங்கள்தானே அழியும் என்ற குருகிய எண்ணத்தில் கண்டும் காணாததுபோல் நாம் கடந்து சென்றால் நமது சுற்றுச்சூழல் அதி வேகமாக மாசடைந்து நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அசுத்தமாகி, நாம் உண்ணும் உணவும் நஞ்சாகிவிடும். அதன் விளைவு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாவோம்.

நீர் தட்டுப்பாடு

ஏற்கெனவே  தமிழ்நாட்டில் பல இடங்களில் காடு, மலைகளை குவாரிகளுக்கு தாரைவார்த்துவிட்ட காரணத்தால்  நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்தையும் தாண்டி பள்ளம் பரித்து கனிமங்களை வெட்டிய காரணத்தால் நிலத்தடி நீர் நஞ்சாகியதோடு நில்லாமல்  நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. சில இடங்களில் நிலத்தடி நீர் வற்றியும் விட்டது.  இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற காற்று  

காடுகளில் உள்ள பல்வேறு வகையான மரங்களையும், செடி கொடிகளையும் அழித்துவிட்டு, போதிய மரங்களை நடுவதையும் தவிர்த்துவிட்டு கார், பங்கலா என்று தற்காலிக சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுவரும் மனிதர்கள் தங்களது உயிரைக் காக்க சுத்தமான காற்றும் முக்கியம் என்பதை உணர மற்றுக்கின்றனர். அத்தகைய மனிதர்கள் சமீபத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துபோன கொரோனா நோயாளிகளின் நிலையை எண்ணிப்பார்த்து  அத்தகைய நிலை நமக்கு ஏற்படாத வண்ணம் மரங்களின் மகத்துவத்தை உணர்ந்து காடுகளை பாதுகாக்கவும், மரங்களை நடவும் தேவையானவற்றை செய்ய வேண்டும்.

இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகமானது  மனிதர்களுக்கு மட்டுமன்று. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. அவ்வுயிர்களுள் மனிதனும் ஓர் உயிர். அவ்வளவே. எனவே அனைத்து உயிர்களும் வாழ உகந்த சூழ்நிலை இருந்தால் மட்டுமே மனிதர்களான நாமும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். அதை தவிர்த்து இயற்கை படைத்த காடு, மலைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அவைகளை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அழித்துவிட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து தான் மட்டும் சொகுசாக வாழ்ந்துவிடாலம் என்று எண்ணினால் அது மிகவும் மூடத்தனமானதாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா பெருந்தொற்றாகும்.

நீ எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்தாலும் உனக்கு தேவையானது சுத்தமான காற்றும், தூய நீரும், நஞ்சில்லா உணவும்தான். அது இல்லையேல் நீ எவ்வளவு பணம் வைத்திருந்தும் பயனில்லை. அம்மூன்றும் சாத்தியம் எப்போது? நீ சுற்றுச் சூழலை பாதுகாத்து அதோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இந்த உண்மையை புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் சிறக்கும்.

ஆகவே காடுமலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? காட்டு விலங்கினங்கள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன?  என்று கூறி கடந்து செல்வதை தவிர்த்து நாம் பொறுப்புடன் செயல்பட இந்த சுற்றுச்சூழல் தினம் முதல் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் வாருங்கள்!!!  

பல்லுயிர் போற்றி பல்லாண்டு வாழ்வோமாக!!!

#பல்லுயிர் #சுற்றுச்சூழல்
#காடு #மலைகள் #கொரோனா
#சுற்றுச்சூழல்தினம்

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box