Search This Blog

Saturday, 3 February 2018

இலஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றுவது எப்படி? – பாகம்-1

தமிழகத்தில் ஒருவர் தாம் சட்டப்படி பெற்ற/வாங்கிய  நிலத்திற்கு பட்டா பெறுவது என்பது பெரும் பாடாக உள்ளது. காரணம் இலஞ்சம் எதிர்பார்க்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மண்டல துணை வட்டாட்சியர்கள்தான். மக்களிடம் உள்ள அறியாமையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் சில அதிகாரிகள் கனிசமான தொகையை அவர்களுக்கு இலஞ்சமாக கொடுத்தால்தான் அவர்களுடைய கடமையை செய்கின்றனர். அப்படி கொடுக்கவில்லை என்றால் அத்தகைய மக்களின் பட்டா மாற்ற விண்ணப்பத்தை உண்மைக்கு மாறான காரணத்தை குறிப்பிட்டும், சட்டவிரோத காரணத்தைக் குறிப்பிட்டும் நிராகரித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க ஒரு சில விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


பத்திரபதிவு மூலம் முறையாக பதிவு செய்து புதிதாக சொத்து (நிலம், வீடு அல்லது பிலாட்)  வாங்குபவர் அவற்றை தனது பெயரில் பட்டா மாற்றிட தனியாக தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திலோ விண்ணப்பம் அளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் சட்டப்படி எங்கு நீங்கள் பத்திரபதிவு மேற்கொண்டீர்களோ அங்கே அதாவது சார் பதிவாளர் அலுவலத்திலேயே பதிவின்போது பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பத்திலும் சேர்த்து தங்களிடம் கையொப்பம் வாங்கபட்டுவிடும். அதற்கான கட்டணமும் பதிவுகட்டணத்துடன் சேர்த்து வாங்கப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல் உட்பிரிவு செய்ய வேண்டிய நிலத்திற்கும் கட்டணம் அப்போதே வசூலிக்கப்பட்டுவிடும். அப்படி வசூலித்தபிறகு சார் பதிவாளர் அவர்கள் அவ்விண்ணப்பங்களை பத்திர ஆவணத்தின் நகல்களோடு சம்மந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவார். பிறகு அச்சொத்து சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) நேரடி விசாரனை மேற்கொண்டு மண்டல துணை வட்டாட்சியர்  அவர்களிடம் சமர்பித்தபிறகு பட்டா வழங்கப்பட வேண்டும். எனவே  அத்தகைய சொத்திற்கு நீங்கள் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடத்திடமோ அலைய வேண்டிய அவசியம் இல்லை.

அதிகாரிகள் சட்டத்தை மதிப்பதில்லையே... என்ன செய்வது ?

முதலாவதாக நம் அச்சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தகவலை அறிந்த பிறகு நீங்கள் செய்யவேண்டியது:-

பத்திர பதிவு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் பத்திரத்தின் நகல்களை சம்மந்தபட்ட தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர் எனவே பதிவு மேற்கொண்டு ஒரு மாதம் கழித்து சார் பதிவாளர் அலுவலகம் சென்று தங்களுடைய விண்ணப்பம் எந்த தேதியில் தாலுக்கா  அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் .
அனுப்பப்பட்டுவிட்டது என்பதை உறுதிசெய்தவுடனே சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டாட்சியரையோ அல்லது கிராம நிர்வாக அலுவலரையோ அனுகி பட்டா மாற்ற விண்ணப்பத்தின் நிலை குறித்து தகவலை கேளுங்கள். முறையான பதில் தரவில்லை அல்லது இலஞ்சம் கொடுத்தால்தான் பட்டா நடைபெறும் என்றாலோ அல்லது மீண்டும் ஒருமுறை பட்டா மாற்ற விண்ணப்ம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவ்வதிகாரி கூறினால் உடனடியாக அவ்வதிகாரி குறிப்பிட்ட அனைத்தையும் அப்படியே ஒரு கடிதத்தில் எழுதி எந்த அதிகாரி தங்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டாரோ அதே அதிகாரிக்கு அக்கடிதத்தை பதிவு தபால் மூலம் அனுப்பிவிடுங்கள். அக்கடிதத்தில் முடிவில்  “இப்படி நீங்கள் கேட்பது சட்டவிரோத செயல் என்பதை தாங்கள் உணர்ந்துகொண்டு சட்டப்படி எனது பெயரில் பட்டா மாற்றி தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட வேண்டும்.

இப்படி நீங்கள் செய்துவிட்டால் கடிதம் கிடைத்த அதே நாளில் தங்களை தொடர்பு கொண்டு பட்டா மாற்றத்திற்கான வேலைகள செய்ய முற்படுவார்கள் அதிகாரிகள். இத்தகைய அனுகுமுறை மூலம் நாம் விரைவில் நமக்கான தீர்வை அடைய வழி வகுக்க சாத்திய் கூறுகளை வழங்கும்.  இந்த யுக்தியை எனது கட்சிக்காரர்களை பயன்படுத்தவைத்து 100% சதவீதம் வெற்றி கண்டுள்ளேன். எனவே நீங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

அடுத்த பதிவில் பட்டா மாற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரிகள் தெரிவிக்கும் சட்டவிரோத காரணங்களும் அதனை சுட்டிகாட்டி இலஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றுவது எப்படி என்பது பற்றி எழுத உள்ளேன். 


#பட்டா #பட்டாமாற்றம் #வட்டாட்சியர் #மண்டலதுணைவட்டாட்சியர் #VAO  #இலஞ்சம்


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...