Search This Blog

Friday, 15 April 2022

குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு

குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காவல் நிலையமல்ல.. 

குடும்ப பிரச்சனை
காவல்துறை என்பது குற்ற சம்பவங்களை பதிவுசெய்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடிய  மிக முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. அதே சமயம் காவல் துறைக்கென்று ஒரு எல்லை உண்டு. அத்துறைக்கு குடும்ப பிரச்சனைகள் , சொத்து சார்ந்த உரிமையியல் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளில்  தலையிடும் அதிகாரம் இல்லை. ஆனால் சில சமயங்களில் திருமணம் சார்ந்த கணவன் மனைவி பிரச்சனைகளும் காவல்நிலையத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றது. 
ஆகையால்  ஏற்கெனவே வேலை பளுவில் இருக்கும் இத்துறை சிறப்பாக செயல்படவும்சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடவும், குடும்ப பிரச்சனைகளுக்கு சுமுகமாக தீர்வு ஏற்படவும்குடும்ப பிரச்சனைகளில்  காவல்துறையின் தலையீடு தவிர்க்கவேண்டிய ஒன்றாகும். 
நமது நாட்டில் ஏழை மற்றும்  பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர்  என்ற பாகுபாடின்றி மிகப் பெரும்பாலானோருக்கு   அடிப்படை சட்டம் தெரியாத காரணத்தால் அவர்களின் குடும்ப பிரச்சனை அனைவற்றிற்கும் காவல்துறையினால்தான் தீர்வு தர முடியும் என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் காவல்துறையை நாடுகின்றனர். சட்டம் குறித்த புரிந்துணர்வு அற்று கணவரோ  அல்லது மனைவியோ காவல்துறையை அணுகும்போது  காவல்துறையானது முதல் கட்ட விசாரணை செய்துவிட்டு அவர்கள் கொடுத்த புகார் குற்ற சம்பவம் இல்லாது அவை குடும்ப பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் காவல்துறையின் கடமை என்னவாக இருக்கவேண்டும் என்றால் குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு என்பது சட்டவிரோதமானது என்றும் அதற்கு தீர்வு என்பது குடும்ப நல நீதிமன்றமே ஆகும் என்று  அறிவுறுத்தி அனுப்பி வைப்பதே சிறந்ததாகும்.
 
ஏனென்றால் குடும்ப பிரச்சனைகளில் காவல்துறை தலையிட்டால்  கணவர் மற்றும் மனைவிக்கிடையே உள்ள சிறு சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகி அவை அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட மிகப்பெரிய காரணமாகி விடும். அது அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் அவர்களின்  குழந்தை(கள்), உறவினர்களையும் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் அத்தகைய பிரச்சனை தேவையில்லாத  சொத்து பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் மனஸ்தாபங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பழிவாங்கும் எண்ணங்களை தூண்டி  குற்ற சம்பவங்களுக்கு வழி வகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். ஆக குடும்பம் என்ற பந்தத்தை காப்பாற்றிடவும், தேவையில்லாத  குற்ற சம்பவங்களை தவிர்க்கவும்  குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு துளி கூட இருக்கக் கூடாது. 

எது குடும்ப பிரச்சனைஎது குற்ற சம்பவம்என்று அறிவது எப்படி என்று நம்மில் பலருக்கு  குழப்பம் ஏற்படுவதுண்டு. நீங்கள் குழம்ப வேண்டாம். கணவ
ன் மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள்  காரணமாக ஏற்படும் சிறு சிறு வெறுப்பு விருப்புகள் குடும்ப பிரச்சனை ஆகும். மேலும் அத்தகைய வெறுப்பு விருப்பு காரணமாக இருவீட்டாருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் இந்த குடும்ப பிரச்சனையில் அடங்கும்.

குற்ற சம்பவம் என்பது வரதட்சனை கேட்டு தொல்லை கொடுப்பது, மனைவியின் மீது வன்முறையாக நடந்துகொள்வது அதாவது அடிப்பது போன்ற துன்புறுத்தும் செயல்கள் ஆகியவை குற்ற சம்பவங்களில் அடங்கும். குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே காவல்துறையின் எல்லைக்கு உட்பட்டதாகும்.

எது குற்ற சம்பவம். எது குடும்ப பிரச்சனை என்று  குழப்பமாக  இருக்கும் பட்சத்தில்  குடும்ப நல ஆலோசகரிடம் கலந்துகொண்டு முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும். 

கணவன் மனைவிக்குள் ஏற்படும் பெரும்பாலான குடும்ப  பிரச்சனைக்கு தாம்பத்தியம் ஒரு மிகப் பெரிய காரணமாக அமைகிறது. திருமண வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில் கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் சார்ந்த புரிதல் இல்லாமல் போவதால் திருமண வாழ்க்கை நிம்மதியின்றி  குடும்பத்தில் பல பிரச்சனைக்கு வித்திடுகின்றது.
 
பல நேரங்களில்  கணவனுக்கு  தனது  மனைவியிடம்  ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் அதாவது மாதவிடாய் காலங்களில் எத்தகையான உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும் என்ற புரிந்துணர்வு  இல்லாததால்   தேவையில்லாதா எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் திருமண வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதேபோன்று ஒரு சில உடல் சார்ந்த குறைபாடுகளால் தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அவை பல்வேறு குடும்பம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன.  இத்தகைய  குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு  என்பது முற்றிலும் தவிர்க்கத்தக்கதாகும். மாறாக இத்தகைய சூழ்நிலைகளில்  மருத்துவர்  அல்லது குடும்ப நல ஆலோசகரிடம்  அணுகுவதே  சிறந்த தீர்வாகும்.
 
இதேபோன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பணி அல்லது இருப்பிட  விருப்பம்  சார்ந்த  வேறுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளும்  குடும்ப பிரச்சனைகளே ஆகும். அத்தகைய பிரச்சனைகளுக்கும் காவல்துறை தீர்வாக இருக்க முடியாது. மாறாக குடும்ப நல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
 
ஆனால் குடும்ப பிரச்சனைக்கு குறிப்பாக திருமணம் சார்ந்த கணவன் மனைவி  பிரச்சனைகளுக்கு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் காவல்துறையால் தீர்வை கொடுக்க முடியாது. ஏனென்றால் குடும்ப பிரச்சனையில் காவல்துறைக்கு தலையிட அதிகாரம் இல்லை. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் பலர் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில்  தனது தரப்பை மிகைப்படுத்த ஏதுவாக  குற்ற சம்பவம் நடந்ததுபோல் ஜோடித்து  புகார் அளிக்கின்றனர். அதன் விளைவு திருமண பந்தம் முறிவு வரை செல்கிறது. அதன் விளைவு  அந்த குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஒரு சில தருணங்களில் புகார் பொய் என்று ஆரம்ப கட்ட விசாரணையிலேயே  தெரிந்துவிடும். ஆனாலும்  ஒரு தரப்பு காவல்துறை அதிகாரியை இலஞ்சம் கொடுத்து மற்றொரு தரப்பை பிளாக்மெயில் செய்து திருமண செலவுகள் , திருமண நகைகள் ஆகியவற்றை திருப்பியளிக்க கட்டப்பஞ்சாயத்து  செய்து கணவன் மற்றும் மனைவிக்குமிடையே  நிரந்தர பிரிவு மற்றும் வன்மத்தை விதைக்கும் வகையில் செயல்படும். இத்தகைய கட்டப்பஞ்சாயத்து சம்பவங்களில் ஈடுபடும் அதிகாரிக்கு இரு தரப்பினரும் இலஞ்சம் கொடுத்தாகவேண்டும். இத்தகைய வெட்கக்கேடான சம்பவங்கள்  இன்றளவும்   ஒரு சில காவல் நிலையத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவேதான் குடும்ப பிரச்சனைகளுக்கு குடும்ப  பெரியவர்களிடம் ஆலோசனை பெற்று தீர்த்துக்கொள்ளுங்கள். அல்லது குடும்ப நல ஆலோசகரிடம்/நிபுணரிடம்  ஆலோசனை பெற்று தீர்வு காணுங்கள். முடியாத பட்சத்தில் குடும்ப நல நீதிமன்றத்தை நாடுங்கள். 

குடும்ப பிரச்சனையில் காவல்துறை என்ற மூன்றாவது  நபருக்கு இடம் அளிக்காதீர்கள். காவல்துறையால் உங்களுக்கு தீர்வை தர முடியாது.  நியாயமாக செயல்படும்  காவல்துறை அதிகாரிகளுக்கும் கூட  குடும்ப பிரச்னையை  மென்மையாக அணுகும் பக்குவம் இருக்கும் என்று உத்திரவாதம் கொடுக்க இயலாது.  
 
#குடும்பபிரச்சனை #காவல்துறை 

5 comments:

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...