Search This Blog

Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Saturday, 5 June 2021

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்னவா?


உலக சுற்றுச்சூழல் தினமான (
5 ஜூன்) இன்றாவது நாம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்படைந்து இயற்கை அளித்த காடு, மலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பாதுகாத்து அதனை நம்பி வாழும் பல்லுயிர்களை அரவனைத்து சுற்றுச்சூழலோடு இணைந்து வாழ்வதை கற்றுக்கொள்ள  வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இனியும் நாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் கண்மூடித்தனமாக செயல்படுவதை தொடர்ந்து கொண்டே இருந்தால் கொரோனா போன்ற கொடிய நோய்க்கு நம்மில் பலர் பலியாகக் கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? அதில் உள்ள உயிரினங்கள்தானே அழியும் என்ற குருகிய எண்ணத்தில் கண்டும் காணாததுபோல் நாம் கடந்து சென்றால் நமது சுற்றுச்சூழல் அதி வேகமாக மாசடைந்து நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அசுத்தமாகி, நாம் உண்ணும் உணவும் நஞ்சாகிவிடும். அதன் விளைவு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாவோம்.

நீர் தட்டுப்பாடு

ஏற்கெனவே  தமிழ்நாட்டில் பல இடங்களில் காடு, மலைகளை குவாரிகளுக்கு தாரைவார்த்துவிட்ட காரணத்தால்  நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்தையும் தாண்டி பள்ளம் பரித்து கனிமங்களை வெட்டிய காரணத்தால் நிலத்தடி நீர் நஞ்சாகியதோடு நில்லாமல்  நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. சில இடங்களில் நிலத்தடி நீர் வற்றியும் விட்டது.  இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற காற்று  

காடுகளில் உள்ள பல்வேறு வகையான மரங்களையும், செடி கொடிகளையும் அழித்துவிட்டு, போதிய மரங்களை நடுவதையும் தவிர்த்துவிட்டு கார், பங்கலா என்று தற்காலிக சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுவரும் மனிதர்கள் தங்களது உயிரைக் காக்க சுத்தமான காற்றும் முக்கியம் என்பதை உணர மற்றுக்கின்றனர். அத்தகைய மனிதர்கள் சமீபத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துபோன கொரோனா நோயாளிகளின் நிலையை எண்ணிப்பார்த்து  அத்தகைய நிலை நமக்கு ஏற்படாத வண்ணம் மரங்களின் மகத்துவத்தை உணர்ந்து காடுகளை பாதுகாக்கவும், மரங்களை நடவும் தேவையானவற்றை செய்ய வேண்டும்.

இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகமானது  மனிதர்களுக்கு மட்டுமன்று. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. அவ்வுயிர்களுள் மனிதனும் ஓர் உயிர். அவ்வளவே. எனவே அனைத்து உயிர்களும் வாழ உகந்த சூழ்நிலை இருந்தால் மட்டுமே மனிதர்களான நாமும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். அதை தவிர்த்து இயற்கை படைத்த காடு, மலைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அவைகளை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அழித்துவிட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து தான் மட்டும் சொகுசாக வாழ்ந்துவிடாலம் என்று எண்ணினால் அது மிகவும் மூடத்தனமானதாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா பெருந்தொற்றாகும்.

நீ எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்தாலும் உனக்கு தேவையானது சுத்தமான காற்றும், தூய நீரும், நஞ்சில்லா உணவும்தான். அது இல்லையேல் நீ எவ்வளவு பணம் வைத்திருந்தும் பயனில்லை. அம்மூன்றும் சாத்தியம் எப்போது? நீ சுற்றுச் சூழலை பாதுகாத்து அதோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இந்த உண்மையை புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் சிறக்கும்.

ஆகவே காடுமலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? காட்டு விலங்கினங்கள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன?  என்று கூறி கடந்து செல்வதை தவிர்த்து நாம் பொறுப்புடன் செயல்பட இந்த சுற்றுச்சூழல் தினம் முதல் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் வாருங்கள்!!!  

பல்லுயிர் போற்றி பல்லாண்டு வாழ்வோமாக!!!

#பல்லுயிர் #சுற்றுச்சூழல்
#காடு #மலைகள் #கொரோனா
#சுற்றுச்சூழல்தினம்

Monday, 31 May 2021

சட்டத்தின் ஆட்சி எதிர் ஆளுங்கட்சியின் ஆட்சி


திருப்பெயர் கிராமத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்த சிலர் தமிழ்நாட்டின் 2021 பேரவை தேர்தல் முடிவுகள் அறிவித்த அடுத்த (03.05.2021) நாளிலிருந்தே பதவியை துஷ்பிரயோகம் செய்து கனிமங்களை கொல்லையடிப்பதையும் சுற்றுச் சூழலை சீரழிப்பதலும் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தனது கட்சி பதவியை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை அச்சுறுத்தியும், கிராம மக்களை அச்சுறுத்தியும் மலைகள், பாறைகள், கல்லாங்குத்து ஆகிவற்றை  அரசின் அனுமதியின்றி வெட்டியெடுத்து பல இடங்களில் பூமிக்கடியில் நீர்மட்டத்தை தாண்டிய ஆழத்திலும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கல் குவாரிகளை இயக்கி வருகின்றனர்.

அனுமதி மறுக்கப்பட்டும் கல் குவாரி இயங்குகிறது

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் 12.03.2021 அன்றே மேற்குறிப்பிட்ட குவாரி உரிமையாளருக்கு கனிம வளத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு அக்குவாரி உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பெயர் கிராமத்தில் இயங்கிவந்த அக்குவாரி உரிமையாளரின் கல் குவாரியும் மூடப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டின் 2021 பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாள் முதலே அக்குவாரி உரிமையாளர் திருப்பெயர் கிராமத்தில் கல் குவாரியை இயக்கத் தொடங்கி விட்டார், அதுவும் முன்பு இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த வெடிகளை நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்திலே வைத்து வருகிறார். இதனால் திருப்பெயர், திருப்பெயர் தக்கா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான சிறுவத்தூர், பரிந்தல், எடைக்கல் ஆகிய கிராமங்களின் இருப்பிடங்கள் வரை அதிர்வு ஏற்பட்டு பல வீடுகள் விரிசலும் அடைந்து வருகின்றன.

ஆளும் கட்சியின் பெயரையும், அந்நபரின் கட்சி பொறுப்பையும் துஷ்பிரயோகம் செய்து கற்களை திருடிச்செல்வதோடு நில்லாமல் அப்பகுதியின் சுற்றுப்புறத்தையும் (நிலத்தடி நீர் உட்பட) சீரழித்து வருகிறார்.

 

திருடு கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை

இதில் பேரதிர்ச்சி என்னவென்றால் மேற்குறிப்பிட்டுள்ள நபர் அரசுக்குத் தெரியாமல் 4,19,061 Cu.mt (கன மீட்டர்) அளவுகொண்ட சாதாரண கற்களை வெட்டி திருடிச்சென்றுள்ளார் என்ற உண்மையை கனிம வளத்துறை கண்டுபிடித்து திருக்கோவிலூர் கோட்டாசியருக்கு மேற்கண்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த பிறகும் இரவு பகல் பாறாமல் மேற்கண்ட நபர் கனிமத்தை திருடுவதையும், சுற்றுச்சூழலை அழிப்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

புகார்களுக்கு நவடிக்கை இல்லை

வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய அவலத்தால் சட்டத்தின் ஆட்சி ஆளும் கட்சியின் ஆட்சிக்கு முன் தோற்றுவிடுமோ என்று மக்களுக்கு ஐயம் ஏற்பட தொடங்கிவிட்டது.

கோரோனா காலத்திலும் சுற்றுச்சூழலை மாசாக்கிவரும் இத்தகைய நபர்கள் மீது ஆளும் கட்சியான திமுக, தனது கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும்சட்டத்தின் ஆட்சியை  வலுவிழக்க வைக்கும் வகையிலும் நடந்துகொண்டு வரும் நபரின் மீது  கடுமையான நடவடிக்கை  எடுத்து  சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது அவசியமாகிறது.

ஆளும் கட்சி அவசியத்தை உணராமல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் சட்டத்தின் ஆட்சி எதிர்  (Vs) ஆளுங்கட்சியின் ஆட்சி என்ற இந்த போட்டியில் சட்டத்தின் ஆட்சி வெல்ல வேண்டும் என்ற முயற்சியோடு எனது சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஆளுங்கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது என்ற மம்மதையில் மிதப்போருக்கு இனி வரும் காலங்களில் சிறந்த பாடம் புகட்டும் காலம்  விரைவில் வரும். திருப்பெயர் கிராமம் புத்துணர்வு பெறும். 

#கல்குவாரி #சுற்றுச்சூழல்

#ஆளும்கட்சி #சட்டத்தின்ஆட்சி


Saturday, 13 February 2021

கடமைகளை செய்யத்தவறும் அதிகாரிகளால் சுற்றுச்சூழல் அழிந்து வரும் அவலம்

தமிழகத்தில் பல்வேறு  இடங்களில் அரசுக்கு  சொந்தமான  கனிம  வளங்கள் ஒரு சில  கயவர்கள் கூடாரத்தால் சூரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தின்  ஆட்சியை நிலைநாட்ட  அரசு  துறைகள் பல இருந்தும் கயவர்கள்  கூட்டத்தின் சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டுதான்  வருகிறது. காரணம்  சட்டத்தின் ஆட்சியை  நிலைநாட்டுவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சில அரசு அதிகாரிகளே சூரையாடும் கயவர்களுக்கு துணை போவதுதான். அக்கயவர்கள் வீசும் எலும்புத்  துண்டுக்கு  ஆசைப்பட்டு சம்பளம்  கொடுக்கும்  அரசுக்கே  துரோகம் இழைக்கின்றனர். சுரண்டலை  தடுக்கவும்,  சுரண்டல்களில் ஈடுபடுவோர்களின்  மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்கவேண்டிய அரசு  அதிகாரிகளே சுரண்டலை  ஊக்குவிக்கும்  வகையில் செயல்படுவதால்  இயற்கை அளித்த கனிம  வளங்கள் கண்மூடித்தனமாக  சுரண்டப்பட்டு  தமிழகத்தில் பல்வேறு  இடங்களில் சுற்றுச்சூழல் சீரழிந்து  வருகிறது. 

கடமைகளை செய்யத்  தவறும் கண்காணிப்புக்  குழுக்கள் 
கனிமங்களின்  சுரண்டல்களைத்  தடுக்க வட்டார  மற்றும்  மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் தமிழகத்தில் பல்வேறு  ஊர்களில் அரசுக்கு  சொந்தமான  இடங்களில் கனிமங்களை வெட்டியெடுக்கப்பட்டு  சூரையாடப்படுவது  தொடர்ந்தே  வருகிறது. வட்டாட்சியர் தலைமையில் செயல்படும்  கண்காணிப்புக்  குழுவில் காவல் துறைகனமம் & சுங்கத்துறை,  வருவாய் துறைமாசு கட்டுப்பாட்டுத்  துறைபோக்குவரத்துத்துறை சார்ந்த  அதிகாரிகளும்  அங்கம்  வகிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் கண்காணிப்புக்  குழுவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்உதவி  இயக்குநர்கனமம் & சுங்கத்துறைமாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆகியோர் அங்கம்  வகிக்கின்றனர். அப்படியிருந்தும்  கண்காணிப்பு  குழுவில் அங்கம்  வகிக்கும்  அதிகாரிகள்  தங்களது  கடமைகளை சரி வர செய்யாத  காரணத்தால்  இன்றளவும் இயற்கை  அளித்த  கனிம  வளங்கள்  கண்மூடித்தனமான  வகையில்  சூரையாடப்பட்டு   வருகின்றன. 

 சுற்றுச்சூழல்  பாதிப்பு
கண்மூடித்தனமான  பேராசையால்  கனிமங்களை  வெட்டியெடுக்கும்  குவாரி உரிமையாளர்கள்  நிலத்தடி  நீர்மட்டத்தை  தாண்டிய  ஆழத்திலும்  சக்தி  வாய்ந்த  வெடிகளை  வைத்து  கனிமங்களை வெட்டி வருவதால் நிலத்தடி  நீரும்  மாசு  அடைந்து  வருகிறது.  மேலும் அதனால் அவ்விடத்தில்  சுற்றியுள்ள  பல்லுயிர்களும் (தாவரங்களும்,  உயிரினங்களும்)பாதிப்படைந்து சுற்றுச்சூழல் அழிந்து வருகின்றன. இயற்கை  எழிலோடு  பல வகை  தாவரங்கள்  மற்றும்  அதனைச் சார்ந்து  வாழ்ந்து  வந்த  உயிரினங்கள்  பல அழிந்துவரும்  சூழல்  நிலவி  தற்போது  மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்  வாழ்வாதார  பிரச்சனைகளையும்  ஏற்படுத்த  தொடங்கிவிட்டது.  இதனால் கிராமங்களிலும் சுத்தமான  நீர்,  சுகாதாரமான  காற்று  ஆகியவை  அறிதாக  தொடங்கி வருகிறது.

 அரசு  அதிகாரிகளின்  கடமை

ட்டார  கண்காணிப்பு  மற்றும் மாவட்ட  கண்காணிப்புக்  குழுவில்  அங்கம்  வகிக்கும்  அதிகாரிகள் அனைவரும்  இயற்கை குறித்த புரிந்துணர்வை  வளர்த்துக்கொண்டு அவற்றை  காக்கும்  பொருட்டு தனது  கடமைகளை செவ்வன  செய்ய  உறுதிகொள்ள வேண்டும். கனிமங்களை  திருடிச் செல்பவர்கள் தேசதுரோகிகள் ஆவர். அத்தகைய தேசதுரோகிகளின் மீது சட்டப்படி  நடவடிக்கை  எடுக்கத்  தவறுவது  என்பது தனது  கடமைகளிலிருந்து தவறுவதாகும்  என்பதை  அரசு  அதிகாரிகள் அனைவரும்  உணர்ந்து இயற்கை அளித்த கனிமங்களை பாதுகாக்க உறுதி ஏற்பது ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் கடமையாகும்.

 #இயற்கை #கனிமவளம் #நிலத்தடிநீர் #கண்காணிப்புக்குழு #சுற்றுச்சூழல்


Saturday, 18 May 2019

கிராமங்களை மீட்பது நமது கடமை


ஆற்று மணலை அபகரித்து, ஏரி மண்ணையும் வெட்டியெடுத்து , ஏரிக்கு செல்லும் ஓடைகளை நாசமாக்கி , ஏரி , விவசாய நிலம் மற்றும் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள கருங்கற்களை வெட்டியெடுத்து பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் ஒரு சில நபர்களால் கிராமங்களில் மட்டும் கிடைத்த சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் நாளுக்கு நாள் அரிதாகிக் கொண்டே வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அத்தகைய நபர்களுக்கு அரசு அதிகாரிகளும் உடைந்தையாக இருந்துகொண்டு நமது நாட்டிற்கும்  நமது மக்களுக்கும் மிகப்பெறிய துரோகம் செய்து வருகின்றனர்.  பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் அத்தகைய கயவர்களையும் அதற்கு துணையாக நிற்கும் துரோகிகளையும் தண்டித்து கிராமங்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமாகும்.

சுத்தமான நீர் கிடைக்குமா?
ஒரு சில நபர்களின் பேராசையால் தற்போது தமிழ்நாட்டில் பல ஆறுகளில் கட்டுப்பாடின்றி மணல் எடுத்ததால் தற்போது ஆற்றில் மணல் அல்லவே தடை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் எப்படியேனும் பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அற்ப ஆசை. அதே போன்று தற்போது கிராமங்களில் உள்ள ஏரிகளையும் விட்டுவைக்கவில்லை. ஏரிக்கு செல்லும் ஓடைகளை நாசமாக்கி அங்கே உள்ள மண் மற்றும் கற்களை வெட்டியெடுத்து அவைகளையும் விற்று பணம் சம்பாதிக்க முற்பட்டுவிட்டனர் ஒரு சில மூடர்கள். 
ஆற்று நீர்பாசனம் இல்லாத கிராமங்களில் ஏரி நீர் பாசனத்தை நம்பிதான் விவசாயமே நடந்துவருகிறது. இந்நிலையில் அத்தகைய ஏரியில் உள்ள மண்ணை வெட்டியெடுத்து அதையும் விற்று சம்பாதிக்கும் அற்ப வேலையில் இறங்கியுள்ளனர் ஒரு சில துரோகிகள். இதனால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீறும் கீழே சென்றுவிட்டது. இத்தகைய நிலை நீடித்து வருமானல் தற்போது சுத்தமான குடிநீரை பருகிவரும் பல கிராமங்கள் தண்ணீர் பாட்டில்களை நம்பிதான் இருக்க வேண்டி வரும்.

சுத்தமான காற்றும் கேள்விக்குறியே?
கிராமம் என்றாலே நினைவுக்கு வருவது சுத்தமான காற்றுதான். ஆனால் அதுவும் இப்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. ஒரு சில நபர்களின் பேராசையாலும், ஒரு சில நம்பிக்கை துரோகிகளாலும் (அரசு அதிகாரிகளாலும்) கருங்கற்களை வெட்டியெடுக்கும் பெயரில் சக்தி வாய்ந்த வெடிகளை வைத்தும், வெட்டியெடுத்த கற்களை அரைப்பதற்காக ராக்க்ஷச இயந்திரங்களை இயக்கி புகைகளைக் கக்கி கிராம சுற்றுப்புரத்தையே மாசு அடைய வைக்கின்றனர்.  விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் புகையின் மூலம் வெளியேற்றப்பட்ட ரசாயன துகள்களாக காட்சியளிக்கின்றன. இதன் மூலம் கிராமத்தில் வாழும் மனிதர்களும் அசுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் நகரத்திலிருந்து நமது கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் இயற்கையின் மடியைத் தேடி செல்கின்ற உணர்வுகள் இருந்தது. ஆனால் அத்தகைய நிலை தற்போது பல கிராமங்களில் மாறி வருகிறது. ஒரு சில பேராசைக்காரர்களாலும், நமது வரிப்பணத்தில் சம்பளம் வங்கிக்கொண்டு நமக்கு துரோகம் செய்து வரும் ஒரு சில அரசு அதிகாரிகளாலும் நாம் நமது கிராமத்தின் பெருமைகளான ஆறு, ஏரி, ஓடை, குட்டை, மலைகள், பாறைகள், காடுகள் ஆகியவற்றை இழந்துகொண்டு வருகிறோம். கூடவே சுத்தமான காற்றையும், குடிநீரையும் சேர்த்தே இழந்து வருகிறோம். எனவே அத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கயவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் அவர்க்ளை நிறுத்தி நமது கிராமங்களின் அடையாளங்களை காப்பது நம்மில் ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை நாம் செய்ய தவறிவிட்டால் நமது குழந்தைகளுக்கு ஏரி என்று காட்ட ஏரி இருக்காது, கிணற்றில் நீரை காட்ட நீர் இருக்காது, மலை என்று காட்ட மலை இருக்காது, ஓடை என்றால் என்ன என்று புரிய வைக்க ஓடையே இருக்காது. எனவே இவைகளைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.

#காற்று #நீர்# ஆறு #ஏரி #ஓடை #குட்டை #மலைகள்#பாறைகள் #காடுகள்
#சுற்றுச்சூழல் #கிராமம்

குறிப்பு: சி.பிரபு, கிராமங்களின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளுக்கு எதிராகவும் வழக்காடும் வழக்கறிஞர்.

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...