Search This Blog

Showing posts with label பணியிடம். Show all posts
Showing posts with label பணியிடம். Show all posts

Friday, 4 February 2022

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களும் உள்ளூர் குழு மூலம் நீதி பெறலாம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்தடுத்தல் மற்றும் குறைதீர்ப்பு சட்டம் 2013-ன்படி பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரணை செய்து நீதி வழங்க உள்புகார் குழு  INTERNAL COMMITTEE    உள்ளது. அதே போன்று பத்து பணியாளர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்த புகார்களை விசாரித்து நீதி வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE  உள்ளது. இக்குழுவானது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலத்துறை அலுவலரின் கீழ் இயங்கி வருகிறது.

உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் பெற்ற உள்ளூர் குழு 

உள்ளூர் குழு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியின் தலைமையில் செயல்படும். இக்குழுவுக்கு உரிமையியல் நீதமன்றத்திற்கு நிகரான அதிகாரத்தை பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல்தடை மற்றும் குறைதீர்ப்பு,  2013,  சட்டம் வழங்கியுள்ளது.  பாதிப்பு ஏற்பட்ட பெண்ணின் இழப்புக்கு ஏற்றவாறு உள்ளூர் குழு  LOCAL COMMITTEE   என்ற இக்குழுவுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக அபதாரம், பணியிடை நீக்கம், பணி நீக்கம் போன்ற தண்டனைகளை வழங்க அதிகாரம் உள்ளது.

இக்குழு உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரானது என்பதால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் குழுவில் புகார் அளிக்கும் அதே சமயம் காவல்துறையிடமும் புகார் அளிக்கலாம். ஏனென்றால் குற்றவாளிக்கு சிறைதண்டனை விதிக்கும் அதிகாரம் உள்ளூர் குழுவுக்கு இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகார் அளித்தால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று குற்றம் நிறுபிக்கப்படின் குற்றவாளிக்கு உரிய சிறை தண்டனை வழங்கப்படும்.

ஆக பாலிய துன்புறுத்தல், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒரே சமயத்தில் உள்ளூர் குழுவிலும், காவல்துறையிடமும் புகார் அளிக்கலாம். ஒன்று சிவில் வழக்கு மற்றொன்று கிரிமினல் வழக்கு ஆகும். காவல் துறையிடம் புகார் அளிக்க அச்சப்படும் பெண்கள் உள்ளூர் குழுவிடம் புகார் அளிப்பது சிறந்தது.

பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்

பேருந்து நிறுத்தங்கள், தெருக்கள், கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் குழாய் அமைந்துள்ள இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களையும் LOCAL COMMITTEE     எனப்படும் உள்ளூர் குழுவிடம் அளிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நபர் தனது எழுத்து மூல புகாரை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சம்மந்தப்பட மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அதாவது உள்ளூர் குழுவுக்கு அளிக்கலாம்.

உள்ளூர் குழுவானது புகார் கிடைத்தவுடன் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து துரிதமாக தீர்வு வழங்கும். 

தமிழகத்தில் தற்போதைய நிலை

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்தடுத்தல் மற்றும் குறைதீர்ப்பு சட்டம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்தும் உள்ளூர் குழு செயல்படுவது போன்று தெரியவில்லை. அப்படியொரு குழு ஒன்று இருப்பது அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலையில்தான் தற்போது சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இப்படியொரு குழு உள்ளது என்பது தெரியாமலே உள்ளது.

அரசுபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

இச்சட்டத்தின்படி  உள்ளூர் குழுஉள்குழு போன்ற குழுக்கள் குறித்தும்எச்செயல்களெல்லாம் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் போன்ற அம்சங்கள்  குறித்தும் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும்  குறைந்தது மாதம் ஒரு முறையாவது விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு, பயிற்சி பட்டரைகள் நடத்த வேண்டும். ஆனால் அரசு இவ்வளவு காலமாக அதனை செய்யாத காரணத்தால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் பல காலமாக கண்டுகொள்ளாமல் புதைந்து போகின்றது. நகரங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளும் மிகப்பெறிய துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

இச்சட்டம் அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகும் பெரும்பாலானோர் நினைக்கின்றனர் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து காவல் துறையை மட்டுமே அனுக வேண்டும் என்று. அவர்களுக்கு தெரியவில்லை உள்ளூர் அல்லது உள்குழு மூலமும் புகார் அளிக்களாம் என்று.

நாம் என்ன செய்ய வேண்டும்

அரசு செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் நமது குழந்தைகளுக்கும் நம்மை சூழ்ந்துள்ளோர்களுக்கும்  உள்ளூர் குழு மற்றும் உள்குழு  குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவத்தை சம்மந்தப்பட்ட குழுவிடம் புகாராக அளிக்கலாம் என்ற தகவலை நம்மால் இயன்ற வரை மற்றவர்களிடம்  பகிர்ந்து பெண்களின் கண்ணியத்தை நிலைநாட்டலாம் வாருங்கள்!!

#உள்ளூர்குழு #பாலியல்துன்புறுத்தல் #துன்புறுத்தல் #தடுத்தல்

#குறைதீர்ப்பு #LOCALCOMMITTEE


இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:

சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின் கண்ணியம் காத்திட வேண்டுமா?


Wednesday, 8 December 2021

சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின் கண்ணியம் காத்திட வேண்டுமா?

பணியிடத்தின் கண்ணியம் காத்திட பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) 2013 சட்டத்தை  செயல்படுத்துங்கள்

பொதுவாக சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு நிறுவனங்களை நடத்துவதால் தேவையில்லாத பல பிரச்சனைகளை வருமுன் தடுக்கலாம். ஆனால் நமது நாட்டில் சட்டதிட்டங்கள் தெரியாமலும், தெரிந்தாலும் அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலும் பல்வேறு நிறுவனங்கள் சிறு, குறு முதல் பெரிய நிறுவனங்கள் வரை இயங்கி வருவது அனைவ்ரும் அறிந்ததே. அத்தகைய கண்டுகொள்ளப்படாத சட்டங்களில் ஒன்றுதான் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம், 2013. ஆங்கிலத்தில் The Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act,2013 (POSH ACT) என்பார்கள்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் 

  பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் பணியிடங்களில் பாலியல் சீண்டல் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், அத்தகைய செயல்களுக்கு தடைவிதிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் உள்புகார் குழு (INTERNAL COMMITTEE) அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று பத்துக்கும் கீழே உள்ள பணியாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE அமைக்கப்பட வேண்டும். இக்குழுவை நியமிப்பது அரசின் கடமையாகும்.

ஆனால் இச்சட்டத்தின்படி மேற்கண்ட குழுக்கள் முறையாக அமைக்கப்படாத காரணத்தால் பணியிடங்கள் பலவற்றில் பாலியல் சீண்டல்களால் பெண்கள் (குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். சமீப காலத்தில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி பாதிப்படைந்து வருகின்றனர் என்ற செய்திகள் அதிகரித்துகொண்டே வருகின்றன.

இச்சட்டம் குறித்து ஒரு புறம் அறியாமையினாலும் மற்றொறு புறம் இச்சட்டம் குறித்து தவறான புரிதல்களாலும் பல நிறுவனங்கள் உள்புகார் குழுக்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலால் பணியாளர்களிடையே பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடாமல், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர் கதையாகி வருகிறது.

உள்புகார் குழு குறித்த தவறான புரிதல்

தமிழகத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் சட்டப்பபடி உள்புகார் குழுவை அமைதுள்ளனவா என்றால் நிச்சயமாக இல்லை என்று குறிப்பிடும் அளவிற்குத்தான் தற்போதைய நிலை உள்ளது. காரணம் அத்தகைய குழுவை அமைத்தால் பெண்கள் பொய்யான புகார்களை அளிப்பார்கள் என்ற அச்சமும்,  நிறுவனத்திற்கு வீண் செலவு என்றும் அபத்தமான அச்சம் கொள்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை உள்புகார் குழு அமைப்பதன் மூலம் தனது நிறுவனத்தின் கண்ணியத்தையும் அங்கு பணிபுரிபவர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றலாம் என்று.

சில நிறுவனங்கள் இக்குழுவை அமைப்பதனால் எந்த பயனும் இல்லை என்று மெத்தனம் காட்டுகின்றன. ஆனால் அந்நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதன் மூலம் தேவையில்லாத அவப் பெயரை தடுக்க முடியும் என்று. ஒரு சிறந்த நிறுவனத்தின் அடையாளம் என்பது தேவையில்லாத பிரச்சனைகளை வருமுன் தடுப்பதும், அத்தகைய பிரச்சனைகள் வருமாயின் முறையான தீர்வு காண்பதும்தான். எனவே நிறுவனத்தின் பெயருக்கும், பணியாளர்களின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும்  கலங்கம் விளைவிக்கக்  கூடிய பாலியல் சீண்டல் சம்பவங்களை தடுக்கவும், தீர்வுகாணவும்  உள் புகார் குழு இன்றியமையாததாகும்.

பாலியல் சீண்டல்கள் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பணியிடங்களில் POSH சட்டம் குறித்து பயிற்சி பட்டரை, விழிப்புணர்வு வகுப்புகள் போன்றவற்றின் மூலம் எத்தகைய செயல்களெல்லாம் பாலியல் சீண்டல்களாக கருதப்படும் என்றும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் எந்த வகையில் யாரிடம் புகார் அளித்து பரிகாரம் பெற்றுக்கொள்ளலாம் போன்றவற்றை பணியாளர்களுக்கு   கற்பிப்பது ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு  நிறுவனத்தின் (பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து நிறுவனங்களின்) கடமையாகும்.

அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல்தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் பணியிடத்தின் கண்ணியமும், பணியாளர்களின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். தேவையில்லாத பிரச்சணைகள் தடுக்கப்பட்டு நிறுவனங்கள் தங்களது பணிகளில் தங்கு தடையின்றி கண்ணியத்தோடு செயல்படும்.  

எனவே வாருங்கள் சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தோடு நிறுவனத்தின் கண்ணியத்தையும் காத்திடலாம்!!! 

#பணியிடம் #பாலியல்சீண்டல்கள் #துன்புறுத்தல்#உள்புகார்குழு

இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...