Search This Blog

Sunday, 21 August 2022

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்

பணியிடத்தில் பாலியல் இயல்பு கொண்ட அருவருக்கத்தக்க வார்த்தையை பயன்படுத்தியும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு  பெண்ணை துன்பத்திற்கு உள்ளாக்குவதும், பாலியல் இச்சைக்கு இணங்காத பெண்ணின் பணியில் பல்வேறு இடையூறுகளை உருவாக்கி அவரது பணியில்  குறுக்கிட்டு  அவரது பணிச் சூழலை பாதகமாக்கும் செயல்கள் அனைத்தும் பணியிடத்தில் நடக்கும்  பாலியல் துன்புறுத்தல்கள் ஆகும். அத்தகைய துன்புறுத்தல்கள் பெண்களுக்கு நடக்காத வண்ணம் தடுக்கவும், தடை செய்யவும் மேலும் அத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கவும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம், 2013-ல் வழிவகை உள்ளது.  

பணியிடம் என்றால் என்ன?

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி பணியிடம் என்பது பெண்கள் பணிபுரியும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகள் ஆகியவை அடங்கும். அதாவது பெண்கள் பணிபுரியும் எல்லா தருணங்களும் பணியிடமாக கருதப்படும். இச்சட்டத்தின் நோக்கமென்பது பெண்கள் பணிபுரியும்போது அவர்கள் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதாகும். எனவேதான் பணியிடத்திற்கான அர்த்தம் இச்சட்டத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.  அதாவது ஒரு பணியிடத்தில் அல்லது நிறுவன/ அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் செயல்கள் அனைத்தும் இந்த சட்ட வரம்புக்குள் அடக்கமாகிறது. அதில் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் போன்ற அனைத்து பெண் ஊழியர்களும், அந்நிறுவனத்திற்கு வருகை புரியும் பெண் வாடிக்கையாளர்கள், பெண் ஒப்பந்ததாரர்கள், பெண் விருந்தினர்கள் போன்ற அனைத்து பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். அதாவது அந்நிறுவனத்தில் அல்லது நிறுவன வளாகத்தில்  பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் அது குறித்து விசாரணை செய்து உறிய நடவடிக்கை எடுப்பது அந்நிறுவனத்தின்  கடமையாகும்.

பத்து அல்லது பத்துக்கும் மேற்படட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் அல்லது அலுவலகத்தில் உள்குழு என்ற அமைப்பு மூலமாகவும், பத்துக்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் பட்சத்தில் உள்ளூர் குழு என்ற அமைப்பு மூலமாகவும் தீர்வு காண பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தில் வழிவகை உண்டு.    

தடுப்பு நடவடிக்கைகள்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படி பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு நிறுவனமும் இச்சட்டம் குறித்து பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், உள்குழு உறுப்பினர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.   

அதே போன்று எவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களாக கருதப்படும் என்பதையும் தனது பணியாளர்களுக்கு புரியவைப்பது ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் தலையாய கடமையாகும்.

துரித நடவடிக்கை

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணிண் பாதுகாப்பு மற்றும் அவருக்கு ஏதுவாக பணிச்சூழலை ஏற்படுத்த பாதிப்பு ஏற்படுத்திய நபருக்கு பணியிடை மாற்றம்பணி இடைநீக்கம் போன்ற துரித நடவடிக்கைகள் எடுக்க உள் குழு மற்றும் உள்ளூர் குழுவுக்கு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின் மூலம் உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க வழிவகை

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், தொழில்பூர்வாமாகவும்  இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு  மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவேதான் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி  பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படட பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இழப்பிற்கு   ஏற்றவாறு உரிய இழப்பீடு வழங்கும் அதிகாரம்  உள் குழு மற்றும் உள்ளூர் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரகசியத்தன்மை காக்கப்படும்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் சம்மந்தமான தகவல்கள் உள் குழு அல்லது உள்ளூர் குழுவால் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு கருதி அவை இரகசியமாக வைத்துக்கொள்ள பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தில்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண் அச்சமின்றி புகார் அளிக்கலாம்.

தாமதமற்ற நீதி

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நபருக்கு உள் குழு அல்லது உள்ளூர் குழுவால் விசாரணை நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவருக்கு குறித்துரைத்த காலகட்டத்திற்குள் நீதி கிடைக்க வழிவகை உள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் எழுத்துபூர்வ பூகாரை உள் குழு அல்லது உள்ளூர் குழுவுக்கு அளித்தாலே போதுமானதாகும். உரிமையியல் நீதிமன்றம்போல் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோன்று அலையவும் தேவையில்லை.

உள் குழு அல்லது உள்ளூர் குழுவின் விசாரணையானது இயற்கை நீதியின் கோட்பாட்டின்படி நடக்கும் என்பதால் விசாரணை துரிதமாக நடக்கும். எனவே பாதிக்கப்பட்டவருக்கு நீதியும் துரிதமாக கிடைக்கும்.

பணியிடத்தில் பாலியல்  துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி சம்மந்தப்பட்ட குழுவுக்கு புகார் அளித்து துரித நீதியைப் பெற முடியும். எனவே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பணியிடத்தில் பெண்களின் கண்ணியத்தைக் காத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முன்வரவேண்டும்.  


IF YOU LIKE THE POST, PLEASE SHARE YOUR THOUGHTS IN THE COMMENT SECTION

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...