Search This Blog

Sunday, 20 May 2018

பட்டா மாற்றம் பெறவேண்டுமா? விழிப்படையுங்கள்... சுலபம்தான்!!!

அசையா சொத்திற்கு பட்டா மாற்றம் பெறுவது சுலபம்தான் , ஆனால் அவற்றை கடினமாக்கியுள்ளனர் தற்போதைய வருவாய் துறை அதிகாரிகள். இதற்கு காரணம் நமது அறியாமைதான். நாம் நமது அறியாமையை நீக்கி   பட்டா மாற்றம் குறித்த சில உண்மைகளை  அறிந்துகொண்டால் பட்டா மாற்றம்   பெறுவது சுலபமாகும் .  

அதிகாரிகளின் சட்டத்தை அவமதிக்கும் செயல்கள்

நாம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நம்முடைய பெயரில் பதிவு செய்யும்போதே பட்டா மாற்றத்திற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. எனவே பட்டா மாற்றத்திற்கென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அதற்கென்று பத்திரங்களின் நகலும் தனியாக கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் பதிவு செய்யப்பட்ட சில தினங்களிலேயே நமது ஆவணத்தின் நகல்களுடன் பட்டா மாற்றத்திற்காக ஆவணங்கள் அனைத்தும் வருவாய் துறைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு நமது சொத்திற்கான பட்டா மாற்றத்தை வருவாய் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி அவர்கள் பட்டா மாற்றம் செய்யவில்லை என்றால் அது நம்முடைய தவறு கிடையாது. அது வருவாய் துறை அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர்மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரின் தவறாகத்தான் கருதப்படும்.

பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்களும்மண்டல துணை வட்டாட்சியர்களும் இந்த தவறைத்தான் பல வருடங்களாக செய்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது குறித்த தமிழ அரசு 1985-ம் வருடமே சட்டம் வகுத்துள்ளது. ஆனால் நமது அதிகாரிகள் அதனை அமல்படுத்தாமல் அவமதித்து வருகின்றனர்.

பத்திரபதிவு குறித்து சட்டவிரோதமாக கேள்வி எழுப்புதல்

அதுமட்டுமல்லாமல் ஒரு சில வருவாய் துறை அதிகாரிகள் தமிழ்நாட்டின் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களிடம் இலஞ்சம் பெறும் நோக்கத்தோடு வேண்டுமென்றே சட்ட விரோதமான காரணங்களை காட்டி பட்டா மாற்ற விண்ணப்பங்களை நிராகரித்தும் வருகின்றனர்.  

எடுத்துக்காட்டாகஒருவர் ஒரு நிலத்தை வாங்கி அதனை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில்  தனது பெயரில் பதிவு செய்து பல ஆண்டுகளாக அந்நிலத்தில் பயிர் செய்து வருகிறார்.  பிறகு பட்டா மாற்றப்படாமலேயே அவர் இறந்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து அவருடைய வாரிசுதாரர்கள் அந்நிலத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் வேறு நபர்களுக்கு (பதிவுத்துறை மூலம் பதிவு செய்து) விற்றுவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது  அச்சொத்தை வாங்கிய நபருக்கு சொத்து அவருடைய பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் தானாகவே பட்டா மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறாத காரணத்தால் அந்நபர்  அவர் பெயரில் பட்டா மாற்றிட விண்ணப்பம் அளிக்கப்படும்போது அவருடைய விண்ணப்பம் கீழ்கண்ட காரணத்தைக் குறிப்பிட்டு நிரகாரிக்கப்படலாம்:-

நீங்கள் யாரிடம் சொத்தை வாங்கினீர்கள் என்று குறிப்பிடுகிறீர்களோ அந்த நபரின் பெயரில் ஏற்கெனவே இந்த சொத்து இல்லை. எனவே பட்டா மாற்றம் நிராகரிக்கப்படுகிறது என்று குறிப்பிடுவார்கள்.

இங்கு நடந்தது என்னவென்றால்அந்நிலம்  ஏற்கெனவே கருப்பன்* பெயரில் இருந்துள்ளது. அவர் இறந்த பிறகு அவரின் ஒரே மகனான ஐய்யனார்*  அந்நிலத்தை அனுபவித்து வருகிறார். பிறகு அவர் அந்நிலத்தை வீராசாமிக்கு* விற்றுவிடுகிறானர். எனவே கருப்பன் அவர்களின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்து  ஐய்யனார் என்பவர் வீராசாமிக்கு சட்டப்படி சார் பதிவாளர் அலுவலத்தில் பத்திர பதிவு செய்து விற்றுவிட்டார்.

எனவே இத்தகைய சூழலில் வீராசாமியின் பட்டா மாற்ற விண்ணப்பத்தினை நிராகரிப்பது சட்டத்திற்கு புரம்பானதாகும். இத்தகைய சூழலில் விராசமியின் பத்திரம் மற்றும் வில்லங்கச் சான்று மற்றும் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நேரடி விசாரணை மட்டுமே பட்டா மாற்றிட போதுமானதாகும்.

நிலத்தின் உரிமை குறித்து கேள்வி எழுப்பி நிராகரித்தல்

சட்டப்படி பார்க்கப்போனால்  நிலத்தின் பத்திர பதிவு பட்டா மாற்ற விண்ணப்பதாரரின் பெயரில் இருக்கும் பட்சத்திலும்அந்நிலத்தை அவரே விவசாயம் செய்து வருகிறார் என்பதை கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவோ அல்லது தாமகவே நேரடியாக விசாரித்து உறுதிபடுத்தியவுடனே  சம்மந்தப்பட்ட  மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள்  பட்டா மாற்றம் செய்ய வேண்டும். பத்திர பதிவு சரியில்லைஅதில் பிழை இருக்கின்றது என்று குறிப்பிடும் அதிகாரம் மண்டல துணை வட்டாட்சியர் அவர்களுக்கு கிடையாது.

ஏனென்றால் சட்டத்தின் பார்வையில் சொத்தின் பத்திரம் ஏற்கெனவே சார் பதிவாளர் அவர்களால் சரிபார்க்கப்பட்டுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக   அச்சொத்தின் உரிமை சம்மந்தமான எவ்வித கேள்வியும் எழுப்ப துணை தாசில்தாருக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால் சொத்தின் உரிமை குறித்து கேள்வி எழுப்ப உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. 

எனவே அன்பர்களே! சட்டவிரோதமான காரணத்தை காட்டி பட்டா மாற்றம் செய்ய அதிகாரிகள் மறுத்தால் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்துதான் பட்டா மாற்ற வேண்டும் என்ற அவசியல் இல்லை. தைரியாமாக மேலே குறிப்பிட்டுள்ள முறையை அதிகாரிகளுக்கு விளக்குங்கள். விழிப்போடு இருங்கள். நாம் விழிப்போடு இருந்தால்  பட்டா மாற்றம் நாளடைவில் சுலபமாகும். உங்கள் உரிமையை இலஞ்சம் கேட்கும் அதிகாரிகளிடம் அடகு வைக்காதீர்கள்.

#வருவாய்துறை #பட்டாமாற்றம் #பட்டா #சார்பதிவாளர் #VAO

*கருப்பன், ஐய்யனார், வீராசாமி ஆகியவை கற்பனை பெயர்களே . வாசகர்களுக்கு புரிதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.  


ஆசிரியர் : சி.பிரபுவழக்கறிஞர்

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...