Search This Blog

Monday, 18 June 2018

மருந்துகளும் காப்புரிமையும்

மருந்துகளும்  காப்புரிமையும்

காப்புரிமை வழங்கப்பட்ட மருந்து நிறுவனத்தைத் தவிர்த்து வேறு ருக்கும் ம்மருந்தை தயாரிக்கவோ அல்லது சந்தைபடுத்தவோ ஒரு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆக ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருந்தை ஒரு நிறுவனம் மட்டும் தயாரித்துச் சந்தைபடுத்துவதால் அம்மருந்து அதிக விலையில் விற்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களும் வேறு வழியின்றி எப்பாடுபட்டேனும் அதிக விலை கொடுத்து அத்தகைய மருந்தை வாங்கும் நிலை உள்ளது. இதே காரணத்தால் பணவசதி இல்லாத ஏழை மக்களுக்கு அத்தகைய விலை உயர்ந்த மருந்து எட்டாக் கனியாகிவிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஆனால் இதுவே அம்மருந்துக்கு காப்புரிமை இல்லையென்றால் அதனைப் பொதுவான பல்வேறு மருந்து நிறுவனங்களும் எவ்விதச் சிக்கலுமின்றித் தயாரிக்கக் கூடும். ஆகையால் மக்களுக்கு மளிவான விலையில் அத்தகைய மருந்துகள் கிடைக்க வழி பிறக்கும்.


 மருந்து காப்புரிமை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு

காப்புரிமைச் சட்டம்,1970 என்ற சட்டமானது எத்தகைய பொருட்கள் மற்றும் செயல்முறைகளுக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் என்றும் எவற்றிற்கு வழங்கக்கூடாது என்பன போன்ற அம்சங்களைக்  குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பாக 3(d), 3(e) & 3(i) பிரிவுகள் எவற்றிற்கெல்லாம் மருந்து காப்புரிமை வழங்கக்கூடாதுஎன்று சில வரையறைகளை வகுத்துள்ளது. அவை  கூடுதல் புதுமைதன்மையற்ற மருந்துக் காப்புரிமை விண்ணப்பங்களை நிராகரிக்க வழிவகை செய்கிறது. இப்பிரிவுகள் இரண்டாம் கட்ட காப்புரிமைகளை (Secondary Patents) அதாவது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் காப்புரிமைகளின் வேறு வடிவங்கள்/உதிரிகள்/உள்ளடக்கங்கள்இணைகள் மற்றும் குணபடுத்தும் முறைகள் ஆகியவற்றிற்குக் காப்புரிமை வழங்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட சட்டப்பிரிவுகளாகும். அதாவது ஏற்கெனவே இருந்து வரும் கண்டுபிடிப்புகளில் ஒரு சில மாற்றத்தை/ மேம்படுத்தல்களை மேற்கொண்டுவிட்டு அல்லது வேறு வடிவத்தைக் காட்டி அவை புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள காப்புரிமையின் காலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு வரும் விண்ணப்பதாரர்களை நிராகரிக்க வகுக்கப்பட்ட சட்டமாகும்.

 உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

இதில் மிகவும் முக்கியமான பிரிவான 3(d) குறித்து நமது உச்சநீதிமன்றம் 01-04-2013 அன்று நோவார்டிஸ் வழக்கில் (Novartis v Union of India) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. Glivec எனப்படும் இரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சந்தைப்படுத்தி வந்த நோவார்டிஸ் நிறுவனம் வேறு (Beta Crystalline) வடிவம் கொண்ட Imatinib Mesylate எனப்படும் மருந்திற்காகக் காப்புரிமைப் பெற 2006-ஆம் ஆண்டு இந்திய காப்புரிமை அலுவலகத்திடம் விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காப்புரிமை மேல்முறையீடு ஆணையத்திடமும் விண்ணப்பித்து அங்கேயும் நிராகரிக்கப்பட்டது. எனவே உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் அந்த புற்றுநோய் மருந்தானது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள Glivec–இன் (இரண்டாம் கட்ட மருந்து) Beta Crystalline வடிவம் எனவும் (increased Therapeutic efficacy) கூடுதல் சிறப்பு அல்லது புதுமைத் தன்மை மெய்பிக்கப்படாத காரணத்தால் அதற்குக் காப்புரிமை வழங்க மறுத்ததை உறுதிசெய்தது.

அந்த மருந்திற்குக் காப்புரிமை வழங்கப்பட்டிருந்தால் Chronic Myeloid Leaukemia எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த ஒரு நபருக்கு மாதம் ரூ.1,30,000 வரை செலவாகியிருக்கும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் அத்தீர்ப்பிற்குப் பிறகு மாதம் ரூ.8000-செலவிலேயே அம்மருந்துகள் கிடைக்கின்றன. ஏனென்றால் தற்போது பல பொது (Generic) மருந்து  நிறுவனங்கள் அத்தகைய மருந்தைத் தயாரித்து வருகின்றன.

 மருந்துகளுக்கு வழங்கப்பட்ட காப்புரிமை குறித்த ஆய்வு அறிக்கை

ஆனால்  2009 முதல் 2016 வரை  இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மருந்து காப்புரிமைகளில் பெரும்பாலானவை விதியை மீறி வழங்கப்பட்டுள்ளது என்று நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம்  தெரிய வந்துள்ளது. அவ்வாய்வறிக்கை குறித்த ஒரு சிறு கட்டுரையை திஇந்து நாளிதழில் காணலாம் . ஆய்வின் முழு அறிக்கையை ஆங்கிலத்தில்காணலாம். 

  #நோவார்டிஸ்#Novartis #காப்புரிமை #Glivec  #மருந்து 

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...